பெங்களூரு நகரில் உள்ள பல்வேறு உணவகங்களில் சமீபத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இந்த ஆய்வில் 132 கிலோ அழுகிய உணவுகளோடு, பலமுறை பயன்படுத்தப்பட்ட 15 லிட்டர் சமையல் எண்ணெயும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஒரு உயர்தர உணவகத்தின் சமையலறையும் பூட்டப்பட்டது. உணவகங்களில் பழைய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்துவது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரிய கேள்விக் குறியாக மாறியுள்ளது.

சமையல் எண்ணெயை அதிக வெப்பநிலையில் மீண்டும் மீண்டும் சூடாக்கும் போது, அதில் ஆபத்தான வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு ஆக்ஸிஜனேற்றப் பொருட்கள் உருவாகின்றன. இது உணவின் நச்சுத்தன்மையை அதிகரித்து, அதை உட்கொள்பவர்களுக்கு உடலில் அழற்சி மற்றும் பல்வேறு ஆரோக்கியச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இதைக் கருத்தில் கொண்டு, கர்நாடக அரசு உணவகங்களிலிருந்து பயன்படுத்தப்பட்ட எண்ணெயைச் சேகரித்து, அதை பயோடீசல் மற்றும் சோப் தயாரிப்பிற்குப் பயன்படுத்தும் சிறப்புத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

ஒரு உணவகத்தில் பொரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஏற்கனவே எத்தனை முறை சூடாக்கப்பட்டது என்பதைச் சாதாரண நுகர்வோரால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், எண்ணெய் வழக்கத்திற்கு மாறாக மிகவும் கருப்பாக மாறினாலோ, லேசான சூட்டிலேயே அதிக புகை மற்றும் நுரையை உருவாக்கினாலோ, அல்லது கெட்ட வாசனை வீசினாலோ அந்த எண்ணெய் தரம் குறைந்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதேபோல, பொரித்த உணவு கசப்பாகவோ அல்லது பிசுபிசுப்புத் தன்மையுடன் இருந்தாலோ அந்த எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

நம் வீட்டிலும் கூட, பொரித்த எண்ணெயை உடனடியாகத் தூக்கி எறிய வேண்டிய அவசியமில்லை என்றாலும், அதைத் தொடர்ந்து பலமுறை சூடாக்குவது நல்லதல்ல. பொரித்து முடித்ததும் எண்ணெயில் உள்ள உணவுத் துகள்களை வடிகட்டி, சுத்தமான காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்து ஒருமுறை மீண்டும் பயன்படுத்தலாம். அதிக மாவுக்கலவை உள்ள உணவுகளைப் பொரித்த எண்ணெய் மிக விரைவிலேயே பாழாகிவிடும் என்பதால், அதில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

“>

வீட்டுச் சமையலில் மீண்டும் எண்ணெயைப் பயன்படுத்த விரும்புபவர்கள் வேர்க்கடலை எண்ணெய், அரிசித் தவிடு எண்ணெய் எள் எண்ணெய் அல்லது காய்கறி எண்ணெய்களைத் தேர்வு செய்வது சிறந்தது. இவை அதிக வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவை என்பதால் எளிதில் வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகாது. இருப்பினும், ஆரோக்கியமான வாழ்விற்கு எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கிச் சமைப்பதைத் தவிர்ப்பதே மிகச் சிறந்த வழியாகும்.