இன்ஸ்டாகிராம் செயலியைப் பயன்படுத்தும்போது பலருக்கும் ஒரு குறிப்பிட்ட வகையான அல்லது கவர்ச்சிகரமான ரீல்ஸ் வீடியோக்கள் தொடர்ந்து பரிந்துரைக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஒருமுறை ஒரு குறிப்பிட்ட காணொளியைப் பார்த்தாலோ, விருப்பம் தெரிவித்தாலோ அல்லது கருத்துகளைப் பதிவிட்டாலோ, அதே போன்ற தன்மையைக் கொண்ட வீடியோக்களை அல்காரிதம் மீண்டும் மீண்டும் நமக்குக் காட்டத் தொடங்கிவிடும். பொதுவெளியில் அல்லது குடும்பத்தினருடன் அமர்ந்து கைபேசியைப் பயன்படுத்தும்போது இந்தச் சூழ்நிலை பலருக்குத் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்திவிடும்.
இந்தச் சிக்கலில் இருந்து விடுபட இன்ஸ்டாகிராம் நிறுவனம் எளிமையான சில வழிமுறைகளை வழங்கி பயனர்களுக்கு உதவியாகவுள்ளது. முதலில் உங்களது இன்ஸ்டாகிராம் சுயவிவரப் பகுதிக்குச் (Profile) சென்று, அங்கு வலது மேல் மூலையில் காணப்படும் மூன்று கோடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு, ‘வாட் யூ சி’ என்ற பிரிவின் கீழ் அமைந்துள்ள ‘கன்டென்ட் பிரிபெரென்சஸ்’ (Content preferences) என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அங்குள்ள சென்சிடிவ் மற்றும் பொலிட்டிக்கல் கன்டென்ட் பிரிவுகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘ரீசெட் சஜெஸ்டட் கன்டென்ட்’ (Reset Suggested Content) என்ற பொத்தானைக் கிளிக் செய்து உறுதிப்படுத்த வேண்டும். இதனைச் செய்தவுடன் உங்களது இன்ஸ்டாகிராம் பரிந்துரைப் பட்டியல் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு, நீங்கள் பின்னர் பார்க்கும் வீடியோக்களுக்கு ஏற்ப புதிய அல்காரிதம் இயங்கத் தொடங்கும் . மேலும், ஒருமுறை இந்த முறையில் ரீசெட் செய்துவிட்டால் பழைய தேவையற்ற வீடியோக்கள் மீண்டும் பரிந்துரை பட்டியலில் வராது என்பது குறிப்பிடத்தக்கது.
