அரசு மருத்துவமனைகளின் நிர்வாகக் குளறுபடிகளும், போதிய கவனமின்மையும் எந்த அளவிற்கு மக்களின் மன வேதனையை அதிகரிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கொடூரமான உதாரணமாக அமைந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் காவலர் தேவ்நாராயண் ராம் என்பவர், உடல்நலக் குறைவு காரணமாகச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆனால், அவர் இறந்து 42 நாட்கள் கழித்து, அவரது மொபைல் போனுக்கு மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ், “நீங்கள் நலமுடன் குணமடைந்து வீட்டிற்குத் திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது” என்று ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது, அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் போலீஸ் அதிகாரி, சிகிச்சையின் போதே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு, முறைப்படி இறுதிச் சடங்குகளும் முடிவடைந்த நிலையில், திடீரென ஆகஸ்ட் மாதத்தில் இந்தத் தானியங்கி மெசேஜ் அவரது மனைவிக்கு வந்துள்ளது.
மேலும் உயிரிழந்த கணவரின் நினைவில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் குடும்பத்தினருக்கு, அவர் “குணமடைந்து விட்டார்” என்று வந்த குறுஞ்செய்தி ஆறாத வடுவை மீண்டும் கிளறிவிட்டுள்ளது. அரசுத் திட்டங்களின் கீழ் போலி கணக்குகள் மற்றும் முறைகேடுகள் நடக்கிறதா என்ற சந்தேகத்தையும் இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.
இச்சம்பவம் குறித்த செய்தி காட்டுத்தீ போலப் பரவி பெரும் சர்ச்சையை உருவாக்கியதை அடுத்து, மருத்துவமனை நிர்வாகம் தனது தவறை ஒப்புக்கொண்டு விளக்கமளித்துள்ளது. டேட்டா என்ட்ரி ஆபரேட்டரின் அலட்சியப் போக்கால் இணையதளத்தில் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதில் ஏற்பட்ட காலதாமதமே இத்தகைய மெசேஜ் செல்லக் காரணம் என்று கூறிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஊழியரைப் பணியில் இருந்து நீக்கியுள்ளனர்.
இருப்பினும், உயிரிழந்த ஒருவரின் தகவலைக் கூடச் சரியாகப் பராமரிக்காத சுகாதாரத் துறையின் இந்த அலட்சியப் போக்கிற்குப் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
