டேட்டிங் செயலிகள் மூலமாகப் பழக்கமாகி, நேரில் சந்திப்பதாகக் கூறி முன்பே வண்டிக் கட்டணம் செலுத்தச் சொல்லி ஏமாற்றும் நூதன மோசடி ஒன்று பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. இது குறித்த எச்சரிக்கை பதிவு தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போலப் பரவி வருகிறது. பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் ஒரு பயனர் பகிர்ந்துள்ள இந்த எச்சரிக்கை பதிவின்படி, டின்டர் (Tinder), பம்பிள் (Bumble) போன்ற டேட்டிங் செயலிகளில் டேட்டிங் ஜோடியாகப் பழகிவிட்டு, பின்னர் வாலிபர்களிடம் பணம் பறிக்கும் கும்பல் செயல்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
🚨 NEW DATING SCAM ALERT IN BENGALURU
Several men are reportedly being targeted through Tinder and Bumble.
The pattern is simple: after matching, the woman agrees to meet but first asks the guy to pay for her cab. Later, she claims she doesn’t trust him and asks him to pay the… pic.twitter.com/TmBlm5PXTO
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 12, 2026
மோசடி நபர்கள் அல்லது போலியான கணக்குகள் மூலம் இளைஞர்களிடம் பேசி, நேரில் சந்திப்பதாக ஆசைவார்த்தை கூறப்படுகிறது. சந்திப்பதற்கான நேரம் வரும்போது, தான் சந்திக்கும் நபரிடம் உடனே தன் வங்கி விவரங்களைப் பகிரத் தயக்கமாக இருப்பதாகக் கூறி, தனக்காக ஒரு கேப் புக் செய்து தருமாறு வாலிபர்களிடம் கேட்பார்கள். உண்மையான விவரங்களுக்கு மாற்றாக, வண்டி ஓட்டுநரின் பெயர், கட்டணம் போன்ற விவரங்களைக் கொண்ட போலியான அல்லது எடிட் செய்யப்பட்ட புக் விவரங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்புவார்கள்.
இதை நம்பி வாலிபர்கள் தாங்கள் உழைத்த பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பியதும், அந்த நபர்கள் உடனடியாக லாக் செய்துவிட்டு மாயமாகிவிடுவார்கள். சிறிய தொகையாக இருப்பதால் பலரும் இதை வெளியே சொல்வதில்லை, ஆனால் இது பலரிடம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வைரல் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்: “நம்மைப் பற்றி இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்று கூறும் ஒரு பெண், எப்படிக் கார் கட்டணத்தை மட்டும் முன்கூட்டியே செலுத்தச் சொல்வார்? இதுவே மிகப்பெரிய ஆபத்து மணிதானே!” என்று பலரும் எச்சரித்துள்ளனர்.
ஆன்லைனில் பெண்களைத் தேடும் சிலரின் முட்டாள்தனத்தை இப்படித்தான் ஏமாற்றுகிறார்கள் என்று கடுமையான கருத்துகளும் பதிவாகியுள்ளன. சில நூறு ரூபாய்களுக்காக ஆன்லைனில் ஏமாறுபவர்களின் அவசரபுத்தியையும், ஏமாற்றும் நபர்களின் தந்திரத்தையும் சமூக வலைதளவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஆன்லைன் தளங்கள் மூலமாகப் பழகுபவர்கள் யாராவது முகம் தெரியாத நபர்கள் சந்திப்புக்கு முன்பாக பணம், போக்குவரத்துச் செலவு, அவசர உதவி என்று எதைக் கேட்டாலும் உடனடியாகத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை கேப் புக் செய்ய வேண்டியிருந்தால், சம்பந்தப்பட்ட நபர்களின் ஸ்கிரீன்ஷாட்டை நம்பாமல், சுயாதீனமாகச் சரிபார்ப்பது மட்டுமே உங்களைப் போன்றவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.
