மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில், மதிய உணவாகக் குழந்தைகளுக்குச் சத்தான உணவுக்குப் பதிலாக வெறும் பூரியும் உப்பும் பரிமாறப்பட்ட அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மைஹார் மாவட்டத்தில் உள்ள கக்ரா அங்கன்வாடி மையத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் காணொளியில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பிஞ்சுச்சிறுமி ஒருவரிடம் என்ன உணவு வழங்கப்பட்டது என்று கேட்கப்படுகிறது. அதற்கு அந்தச் சிறுமி, “பூரியும் உப்பும்…” என்று வெளிப்படையாகக் கூறுவது பார்ப்பவர்களை அதிரவைக்கிறது.

அரசு அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊட்டச்சத்து உணவுகளின் தரம் குறித்த கடுமையான கேள்விகளை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. போதிய ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்படாமல், வெறும் உப்பும் பூரியும் கொடுக்கப்பட்டதைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, மாவட்ட திட்ட அலுவலர் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதோடு திட்ட அலுவலர் அகிலேஷ் தீபங்கர் உடனடியாக சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையத்திற்கு நேரில் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளார். முதற்கட்ட விசாரணையில், இந்த வைரல் வீடியோ சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும், தற்போதுதான் அது சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாகியுள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட திட்ட அலுவலர் கூறுகையில், “கக்ரா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்குப் பூரியும் உப்பும் வழங்கப்பட்ட வீடியோ எனது கவனத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திட்ட அலுவலரிடம் இருந்து விரிவான அறிக்கை பெறப்பட்டு, உண்மைகள் கண்டறியப்பட்டதும் விதிகளின்படி பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.