மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள சேதமடைந்த சாலையை மூன்று பள்ளிச் சிறுமிகள் புதுமையான முறையில் செய்தியாளர்களைப் போல நடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, உள்ளூர் எம்.எல்.ஏ உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையைச் சீரமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளார்.

அதாவது ராய்காட் மாவட்டம் காண்ட்பே-கொண்டிவாடே பகுதிக்குச் செல்லும் சாலை முழுவதும் பள்ளங்களும் குழிகளுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பள்ளிக்குச் சென்று வர அவதிப்பட்ட மூன்று மாணவிகள், இந்தச் சிக்கலை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்த முடிவு செய்தனர். ஒரு மாணவி ‘செய்தியாளராகவும்’, மற்றொரு மாணவி ‘கேமராமேனாகவும்’ மாறினர். மூன்றாவது மாணவி பாதிக்கப்பட்ட அப்பகுதிவாசியாக நடித்துப் பேட்டி அளிப்பது போலக் காணொளி பதிவு செய்யப்பட்டது.

 

மூடப்பட்ட குடையை ‘மைக்’ போலப் பயன்படுத்தி, “இதுல குழியில் சாலை இருக்கா? இல்லை சாலையில் குழி இருக்கா?” என்று நக்கல் கலந்த பாணியில் அவர்கள் கேள்வி எழுப்பி பதில் கொடுத்திருந்தனர். இந்தச் சிறுமிகளின் திறமையும், சாலையின் மோசமான நிலையை வெளிப்படுத்தும் விதமும் இணையத்தில் காட்டுத் தீ போலப் பரவியது. லட்சக்கணக்கான பார்வைகளைக் குவிந்த இந்த வீடியோ, ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திர தோர்வே அவர்களின் கவனத்திற்குச் சென்றது.

வீடியோ வைரலான வேகத்தில், சற்றும் தாமதிக்காமல் இரவோடு இரவாக அப்பகுதியில் தற்காலிகப் பள்ளங்களை நிரப்பும் பணியை எம்.எல்.ஏ. தொடங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கனமழை காரணமாக சாலையின் சில பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. மழைக் காலம் முடிந்தவுடன் இந்தச் சாலை புதிய சாலையைப் போல முழுமையாகச் சீரமைக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார். சிறுமிகளின் குறும்புத்தனமான ஆனால் அழுத்தமான ஒரு முயற்சி, அதிகாரிகளை உடனடியாக அசைத்துப் பார்த்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.