டெல்லியிலிருந்து புனே நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில், ஏசி பழுதடைந்ததால் கேபின் பகுதி சுட்டெரிக்கும் வெயில் போல மாறியது. இதனால் மூச்சுத் திணறி அவதிப்பட்ட பயணிகள் விமானத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டதுடன், விமான ஊழியர்கள் தங்களை மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். டெல்லியில் இருந்து புனே செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்பட ஏராளமான பயணிகள் பயணம் செய்யத் தயாராக இருந்தனர். பயணிகள் அனைவரும் ஏறிய சில நிமிடங்களிலேயே விமானத்திற்குள் திடீரென வெப்ப நிலை கடுமையாக உயர்ந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த தகவலின்படி, விமானத்திற்குள் தாங்க முடியாத அளவுக்கு வெயில் காற்று வீசியதாகவும், பயணிகள் அனைவரும் வியர்வையில் நனைந்ததாகவும் தெரிவித்துள்ளார். கடுமையான வெப்பம் காரணமாக பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. “வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் தவித்த நிலையிலும், விமானத்தை ஓடுதளத்திற்கு கொண்டு சென்றார்கள்” என்று அந்தப் பயணி அதிர்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
हे दिल्लीहून पुण्याला जाणारे स्पाइसजेटचे विमान होते. विमानामध्ये आबालवृद्धांसह लहान मुलं देखील होती. या विमानात बसल्यानंतर विमानातील तापमान अचानक प्रचंड वाढलं. तापमान एवढं वाढत गेलं की लोकांना सहन होईना. सगळे घामाने ओले झाले होते. लोकांना श्वास घ्यायला खूप जास्त त्रास व्हायला… pic.twitter.com/jVYTEMcFNv
— Leshpal_speaks (@Leshpal_speaks) August 11, 2026
நிலைமை மோசமடைந்ததை உணர்ந்த பயணிகள், உடனடியாக விமானப் பயணத்தை ரத்து செய்யும்படியும், ஏசி கோளாத்தைச் சரிசெய்யும்படியும் கூறினர். ஆனால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் விமானத்தை ஓடுதளத்திற்கு நகர்த்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஆத்திரமடைந்த பயணிகள் விமானத்திற்குள்ளேயே போராட்டத்தில் குதித்தனர். அப்பொழுது, கேப்டன் மற்றும் விமான ஊழியர்கள் பயணிகளிடம் கத்தியதுடன், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் காவல்துறையை வரவழைத்து கைது செய்வோம் என்று மிரட்டியதாகவும் பயணிகள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. விமானத்திலிருந்து வெளியேறிய பயணிகள், விமான நிலைய வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பயணிகளின் அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பையும் காற்றில் பறக்கவிட்ட இந்தச் சம்பவம் விமானப் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
