சுட்டெரிக்கும் விளம்பரங்களையும் சோஷியல் மீடியா ஃபில்டர்களையும் பார்த்துவிட்டு, சருமத்தைப் பாதுகாக்கிறேன் என்ற பெயரில் தேவையில்லாமல் விலையுயர்ந்த அழகுக் கிரீம்களை வாங்கி வைக்கும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. முகம் எப்போதுமே எந்தக் குறையுமன்றி ‘பெர்ஃபெக்ட்டாக’ இருக்க வேண்டும் என்ற அதீத எண்ணம் மற்றும் பதற்றம் மருத்துவ ரீதியாக ‘காஸ்மெட்டிகோரெக்ஸியா’  அல்லது ‘டெர்மோரெக்ஸியா’  என்று அழைக்கப்படுகிறது. இது ஒருவகையான அழகுச் சாதன அடிமைத்தனமாகும்.

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் வரும் பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களின் தோற்றத்தைப் பார்த்துப் பலரும் இந்த மோகத்தில் விழுகின்றனர். ஆனால், அவர்கள் பயன்படுத்தும் ஏஐ ஃபில்டர்கள், லைட்டிங் மற்றும் போட்டோ எடிட்டிங் போன்ற உண்மைகளை மறந்துவிட்டு, இளைஞர்கள் பல படிநிலைகள் கொண்ட தேவையில்லாத சரும பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுகின்றனர். இதனால் தேவையில்லாத மன அழுத்தமும், பண விரையமும் ஏற்படுவதோடு, கண்ட கிரீம்களைப் பயன்படுத்துவதால் சருமத்தின் இயற்கைத் தன்மையும் முற்றிலுமாகப் பாழாகிறது.

ஒவ்வொருவரின் சருமமும் வயதுக்கு ஏற்ப மாறுபடுவது இயற்கை என்பதை முதலில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். விளம்பரங்களைப் பார்த்துத் தாங்களாகவே வாங்கிப் பயன்படுத்தும் கெமிக்கல் கிரீம்கள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் அலர்ஜி, எரிச்சல் மற்றும் சருமத்தில் கரும்புள்ளிகளை உண்டாக்கக்கூடும். எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்குச் சிறப்பான கிரீம்கள் எதுவும் தேவையில்லை; வறண்ட சருமம் உள்ளவர்கள் சாதாரண மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தினாலே போதுமானது.

இயற்கையான பொலிவைப் பெற கண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை விட, சத்தான உணவுகளை உண்பதும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதும் மிக அவசியமாகும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொண்டு, பாஸ்ட் ஃபுட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்லும்போது சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்கிரீன் கிரீம்களை மட்டும் பயன்படுத்தலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது.

அழகுச் சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது பொறுமை மிக முக்கியம். ஒரு பொருள் சருமத்திற்குச் செட் ஆக குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என்பதால், அடிக்கடி கிரீம்களை மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இயற்கையான அழகை ஏற்றுக்கொண்டு, அடிப்படையான பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதே தேவையற்ற நோய்களிலிருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் நம்மைக் காக்கும்.