ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நாளைக் கடப்பதே சிரமம் என்ற நிலைக்கு பலரின் அன்றாட வாழ்க்கை மாறிவிட்டது. வேலை, தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு என பல தேவைகளுக்கும் செல்போன் முக்கிய கருவியாகிவிட்ட நிலையில், இந்தியர்கள் எந்த செயலிகளில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்பது குறித்த சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

பேங்க் ஆஃப் அமெரிக்காவின் நிதிச்சந்தை ஆராய்ச்சி பிரிவு மேற்கொண்ட ஆய்வில், இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களின் செயலி பயன்பாடு குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இன்ஸ்டாகிராமில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 49 மணி நேரம் 42 நிமிடங்களும், யூடியூபில் 47 மணி நேரம் 23 நிமிடங்களும் இந்தியர்கள் செலவிடுகின்றனர்.

சமூக வலைத்தளங்களைத் தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுகளும் இந்தியர்களின் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்கின்றன. ‘ஃப்ரீ ஃபயர்’ விளையாட்டில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 41 மணி நேரம் 12 நிமிடங்கள் செலவிடப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. அதேபோல், முகநூலில் 24 மணி நேரம் 45 நிமிடங்களும், வாட்ஸ்அப்பில் 18 மணி நேரம் 49 நிமிடங்களும், ‘எக்ஸ்’ தளத்தில் 13 மணி நேரம் 30 நிமிடங்களும் செலவிடப்படுகின்றன.

பொழுதுபோக்கு பயன்பாட்டிலும் இந்தியர்களின் செல்போன் சார்பு அதிகரித்துள்ளது. பல்வேறு ஓ.டி.டி. தளங்களில் இந்தியர்கள் மாதத்திற்கு சராசரியாக 10 முதல் 22 மணி நேரம் வரை செலவிடுவதாக அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த மொபைல் டேட்டா கட்டணம் மற்றும் மலிவான ஸ்மார்ட்போன்கள் கிடைப்பது போன்ற காரணிகளும் இந்தியாவின் டிஜிட்டல் பயன்பாடு வேகமாக வளர்வதற்கு முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.