மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்துள்ள ஒரு கோரச் சம்பவம், ஒட்டுமொத்தப் பகுதி மக்களையும் கடும் அதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. இப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை, திடீரென அங்கு திரண்டு வந்த நான்கைந்து தெருநாய்கள் கூட்டமாக வந்து சூழ்ந்துகொண்டு கொடூரமான முறையில் தாக்கத் தொடங்கின.
நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த உள்ளூர் வாசிகள், சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக ஓடிவந்து நாய்களை விரட்டிச் சிறுவனைக் காப்பாற்றினர். அந்தச் சிறுவன் அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச்சேதத்தில் இருந்து தப்பியுள்ளான். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இங்கு நாய் கடிக்க ஆளாகும் பொதுமக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2015-16 நிதியாண்டில் 10,165 ஆக இருந்த நாய் கடி வழக்குகள், கடந்த 2025-26 நிதியாண்டில் கிடுகிடுவென உயர்ந்து வரலாறு காணாத அளவில் 38,004 வழக்குகளாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 35.25 சதவீதம் அதிகமாகும். இந்த ஆபத்தான போக்கு நடப்பு நிதியாண்டிலும் தொடர்கிறது; அதாவது, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் நான்கு மாதங்களில் மட்டும் இதுவரை 13,615 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது சராசரியாக மாதத்திற்கு 3,404 பேரை நாய்கள் கடித்துக் குதறி வருகின்றன. இதே நிலை நீடித்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 40 ஆயிரத்தை எட்டிவிடும் என்று அஞ்சப்படுகிறது.
🚨 Stray dog menace in #PimpriChinchwad: A child was surrounded by 4-5 stray dogs in Chinchwade Nagar, with the attack caught on CCTV. PCMC recorded 38,004 dog-bite cases in 2025-26, while 13,615 cases were reported in just 4 months of 2026-27. #StrayDogs #PCMC pic.twitter.com/QrZXwHNKdW
— Varad Bhatkhande | Journalist (@VaradBhatkhande) August 11, 2026
தொடரும் இந்தத் தாக்குதல்களால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள உள்ளூர் மாமன்ற உறுப்பினர் சேகர் சிஞ்ச்வாடே, “தெருநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இதேபோல் ஒரு சிறுவன் தன் கையில் இருந்த பையைச் சுழற்றித் தப்பியோடி உயிர் பிழைத்தான். ஒரு சிறுமி நாய்களுடன் மூன்று நிமிடங்கள் போராடிய கோரச் சம்பவமும் நடந்துள்ளது. நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும், ஆறு மாதங்களாகியும் எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக நாய்களின் கணக்கெடுப்பு நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து மாநகராட்சி தரப்பில் சில விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது குறித்துப் பேசிய மாநகராட்சி கால்நடைத்துறையின் துணை ஆணையர் சந்தீப் கோட் கூறுகையில், “நேரு நகரில் உள்ள நாய் கருத்தடை மையத்தின் வசதிகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. சிறுவனைத் தாக்கிய நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன” என்றார்.
