மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜபல்பூரைச் சேர்ந்த இளநிலைப் பொறியாளர் முகேஷ் விஸ்வகர்மா மற்றும் நீதிமன்ற ஊழியர் சோனாலி சர்மா தம்பதியினர், தங்களது 2 வயது மகன் மான்விக்கை கவனித்துக்கொள்ள ரஜினி சவுத்ரி என்ற பெண்ணைப் பணிக்கு அமர்த்தினர்.
மாதத்திற்கு 5,000 ரூபாய் ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட அந்தப் பெண், தம்பதியினர் வேலைக்குச் சென்ற நேரத்தில் குழந்தைக்குப் பால் மற்றும் உணவு வழங்காமல் தானே உண்டு வந்துள்ளார். மேலும், குழந்தையைக் கூர்மையான சீப்பால் குத்துவது, தலைமுடியைப் பிடித்து இழுப்பது மற்றும் கழுத்தை நெரிப்பது எனச் சொல்லொண்ணாத் துயரங்களை இழைத்துள்ளார். சிரித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென உணவருந்துவதை நிறுத்தி, அடிக்கடி நோய்வாய்ப்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோர், வீட்டில் ரகசிய சிசிடிவி (CCTV) கேமராக்களைப் பொருத்தினர்.
அதில் பதிவான காட்சிகள் பெற்றோரை உறைய வைத்தன. பணிப்பெண் ரஜினி, அழுது கொண்டிருக்கும் குழந்தையை இரக்கமின்றித் தாக்குவதும், பசியால் வாடும் குழந்தைக்குத் தனது எச்சில் உணவை ஊட்டுவதும் கேமராவில் பதிவாகியிருந்தது.
இது குறித்து 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதன் மஹால் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ரஜினி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த ஜபல்பூர் மாவட்ட நீதிமன்றம், சிசிடிவி காட்சிகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை முக்கிய ஆதாரங்களாக ஏற்றுக்கொண்டது.
குற்றம் சாட்டப்பட்ட ரஜினிக்கு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) 323-வது பிரிவு மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் 75-வது பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். குழந்தையின் பாதுகாப்பில் மெத்தனமாக இருந்ததற்காக எந்தவிதமான கருணையும் காட்ட முடியாது எனத் தெரிவித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.
தற்போது இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி, பணிக்குச் செல்லும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
