உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் , சனிக்கிழமை மதியம் 24 வயது மதிக்கத்தக்க சத்யம் என்ற இளைஞர் திடீரென 30 அடி உயர மின் கம்பத்தில் ஏறி அமர்ந்தார். குடும்பத்தினருடன் ஏற்பட்ட சொத்துத் தகராறு மற்றும் தனது ஆதார் அட்டையைப் பெற்றோர் பறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த அவர், கம்பத்தின் உச்சியில் இருந்த இரும்புக் கோணத்தில் அமர்ந்து கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

கீழே நின்றிருந்த பொதுமக்கள் அவரை இறங்குமாறு கெஞ்சியும் கேட்காத அந்த இளைஞர், தான் அணிந்திருந்த ஜாக்கெட்டைக் கழற்றி அதற்குத் தீ வைத்து எறிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர், சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஏணி மூலம் மேலே ஏறி அந்த இளைஞரைப் பாதுகாப்பாக மீட்டனர். அந்த நேரத்தில் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

தற்கொலைக்கு முயன்ற இளைஞரை மீட்ட போலீசார், அவரிடம் இருந்த ஜாக்கெட்டைப் பறிமுதல் செய்து விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் பரபரப்பான சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த ‘ஹை-வோல்டேஜ்’ நாடகத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் பதற்றம் நிலவியது.