ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டம் பிலானி அருகே உள்ள பகினா கிராமத்தில், பழைய பகை காரணமாக நண்பனை கோடரியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பணியாற்றி வந்த தலிப் சுவாமி என்பவர் விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தலிப் சுவாமிக்கும் அவரது நண்பரான ஆசிஷ் சர்மாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஊர் பெரியவர்கள் முன்னிலையில் அந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டு இருவரும் மீண்டும் நண்பர்களாகப் பழகி வந்தனர். இருப்பினும், ஆசிஷ் சர்மா பழைய பகையை மனதில் வைத்துத் தனது நண்பனைக் கொல்லத் திட்டமிட்டு வந்துள்ளார். தலிப் சுவாமி மீண்டும் பணிக்குத் திரும்ப இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தலிப் சுவாமி இரவு நேரத்தில் தனது வீட்டின் முற்றத்தில் தாயின் அருகே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஆசிஷ் சர்மா மறைத்து வைத்திருந்த கோடரியால் அவரது கழுத்து மற்றும் முகத்தில் பயங்கரமாகத் தாக்கியுள்ளார். மகனின் அலறல் சத்தம் கேட்டுத் தாய் தடுக்க முயன்றும், ஆவேசமாக இருந்த ஆசிஷ் சர்மா தொடர்ந்து தாக்கியதில் தலிப் சுவாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

பழிவாங்கும் எண்ணம் நிறைவேறிவிட்டதாகக் கூறிவிட்டு அங்கிருந்து தப்பியோடிய ஆசிஷ் சர்மாவை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். உயிரிழந்த தலிப் சுவாமியின் சகோதரர் சுனில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், ரத்தக் கறைகள் படிந்த கொலைக் கருவியைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.