உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டம் கபூர்வூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சொத்து மற்றும் பணப் பகிர்வு தகராறு காரணமாக நடைபெற்ற ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஜேவர் விமான நிலைய நில ஆர்ஜிதத்தின் மூலமாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக சுமார் 5,40,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைப் பெற்றுக் கொள்வதில் குடும்ப உறுப்பினர்களிடையே கடும் மோதல் வெடித்துள்ள நிலையில், பணத்தை அபகரிக்கும் வெறியில் குடும்பத்தினரே முதிய பெண்ணைக் குறிவைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட  மூதாட்டி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், ஏற்கனவே வழங்கப்பட்ட தொகையில் பாதியை எடுத்துக் கொண்ட அவரது மருமகள்களும் பேரன்களும், மீதமுள்ள தொகையையும் உடனடியாகத் தங்களுக்குத் தர வேண்டும் எனத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.

அந்தப் பணத்தைக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், சம்பவத்தன்று காலை நேரத்தில் மூதாட்டியைப் பொதுச்சாலையில் வழிமறித்துத் தாறுமாறாகத் தாக்கியுள்ளது. நடுரோட்டில் ஒரு வயதான பெண்ணை இழுத்துச் சென்று அவர்கள் தாக்கிய காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வருவதுடன், மனிதநேயமற்ற இந்தக் செயலுக்குக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த வெறித்தனமான தாக்குதலில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூதாட்டி, தனக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போலீசாருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மூதாட்டியின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், உடனடியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பணத்திற்காகப் பெற்ற குடும்பத்தினரே வயதான மூதாட்டி மீது சிகிக்சைக்குள்ளாகும் அளவுக்குத் தாக்குதல் நடத்தியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.