உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் ரேபிடோ  பைக் டாக்சி பயணித்த இளம் பெண் ஒருவருக்கு அதிர்ச்சியளிக்கும் அனுபவம் ஏற்பட்டுள்ளது. செயலி  காட்டிய அதிகாரப்பூர்வ வரைபடப் பாதையை விடுத்து, வேறு பாதையில் செல்லுமாறு ஓட்டுநர் கூறியதை பெண் மறுத்ததால், பயணத்தை பாதையிலேயே முடித்துக் கொள்ளுமாறு ஓட்டுநர் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு அச்சம் காரணமாக ஓட்டுநர் சொன்ன பாதையில் செல்ல மறுத்த அப்பெண்ணிடம், ” என் வண்டி, என் விருப்பம் என்று ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், வரைபடத்தில் இல்லாத பாதையில் வர முடியாது என உறுதியாகக் கூறிய பெண்ணை, அரை வழியிலேயே இறக்கிவிட்டுப் சென்றுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை அந்தப் பெண் தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Janvi Choudhary (@jnvchoudhary)

தான் எதிர்கொண்ட இந்த கசப்பான அனுபவத்தை அப்பெண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்த நிலையில், அது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் பலரும் ரேபிடோ ஓட்டுநரின் பொறுப்பற்ற நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், பல பயனர்கள் தங்களுக்கும் இதுபோன்ற ஆபத்தான அனுபவங்கள் நேர்ந்துள்ளதாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியதைத் தொடர்ந்து, ரேபிடோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. “வாடிக்கையாளரின் இந்த அனுபவம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” எனக் குறிப்பிட்டுள்ள அந்நிறுவனம், பெண்ணிடம் பயணத்தின் விவரங்களைக் கேட்டுப் பெற்றுள்ளதாகவும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.