டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுப் பிரச்சனையை முன்னிறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனத் தொடர் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். இந்தச் சூழலில், இது குறித்து மாநில பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் பேசிய ஆவேசமான காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

​அந்தக் காணொளியில் மிகவும் காட்டமாகப் பேசிய அஸ்வத்தாமன், “நீட் வினாத்தாள் கசிவு குறித்துப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், அதைப் பற்றிப் பேசாமல் எதற்காக ஆர்டிகிள் 370 பற்றிப் பேச வேண்டும்? பாகிஸ்தான் பற்றியும் பங்களாதேஷ் பற்றியும் எதற்காகப் பேச வேண்டும்? இவர்கள் பேசும் எல்லா வீடியோ ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. கருத்துரிமை என்ற பெயரில் யாருக்கு என்ன தோன்றும் அதை எல்லாம் பேசிவிட முடியாது. ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று பேசுவதற்கு இங்கே யாருக்கும் கருத்துரிமை கிடையாது.

இந்திய தேசத்திற்கு ஆதரவாகப் பேசுவது மட்டும்தான் உண்மையான கருத்துரிமை! அதை விடுத்து, உங்கள் இஷ்டத்திற்குப் பேசுவதெல்லாம் கருத்துரிமை ஆகிவிடாது” என்று கடுமையாகச் சாடினார். ​தொடர்ந்து போராட்டக்காரர்களின் வன்முறைச் செயல்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சாக வேண்டும் என்று சொல்வதெல்லாம் என்ன மாதிரியான கருத்துரிமை? மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோவை மட்டும் பார்க்கிறீர்களே… காவல்துறையினரின் கண்ணில் பெப்பர் ஸ்பிரே அடித்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லையா?

சிஆர்பிஎஃப் வீரரை 100 பேர் சூழ்ந்து கொண்டு கொடூரமாகத் தாக்கியதைப் பார்க்கவில்லையா? ஒரு போலீஸ்காரரைத் தள்ளிவிட்டு மிதி மிதி என்று மிதிப்பதையெல்லாம் உண்மையான மாணவர்கள் நிச்சயமாகச் செய்ய மாட்டார்கள்” என ஆவேசத்துடன் குறிப்பிட்டார். ​மேலும், “ஒரு பெண் பத்திரிகையாளரின் மாண்பைக் குறைக்கும் விதத்தில், அவரைத் தொடக்கூடாத இடத்தில் தொட்டு இழுத்துச் செல்வதையெல்லாம் மாணவர்கள் செய்வார்களா? அனைத்திற்கும் மேலாக, தார் கார் ஒன்றுக்கு ஒருவர் தீ வைப்பதைப் பார்க்கிறோம்.

அவரைப் பார்த்தால் மாணவர் மாதிரியா இருக்கிறது? அவ்வளவு வயதான ஒரு மாணவரை நீங்கள் எங்காவது பார்த்ததுண்டா? சோனம் வாங்சுக் என்ன மாணவரா? அவர் எத்தனை படத்தில் நடித்திருக்கிறார்? ஏதாவது ஆராய்ச்சி செய்து பேட்டன்ட் (Patent) வாங்கியிருக்கிறாரா? பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் அடிக்கடி சென்று வருபவர்களெல்லாம் உங்களுக்கு விஞ்ஞானிகளா? உங்கள் கருத்துக்களை எல்லாம் என் மீது திணிக்காதீர்கள்” என்று அஸ்வத்தாமன் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

​”போராட்டம் என்ற பெயரில் தேச விரோதக் கருத்துக்களைப் பரப்புவதையும், வன்முறையில் ஈடுபடுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்ற தொனியில் பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் பேசிய இந்த வீடியோ, தற்போது இணையதளங்களில் அசுர வேகத்தில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.