மேற்கு வங்காளம் தெற்கு கொல்கத்தா சட்ட கல்லூரியைச் சேர்ந்த மாணவியை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான மனோஜ் மிஷ்ரா ஆவார். கல்லூரியின் முன்னாள் மாணவரான இவருடன் அக்கட்சியை சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் ஜைப் அகமது மற்றும் பிரமீத் முகர்ஜி ஆகிய இருவரும் மாணவியை பலாத்காரம் செய்து காயப்படுத்தி இருக்கின்றனர் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கல்லூரியின் பாதுகாவலர் பினாகி பானர்ஜி என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் 3 மாதங்களுக்குப் பின் துணை முதல்வர் நொய்னா சாட்டர்ஜி ராஜினாமா செய்ய முன்வந்திருக்கிறார். அந்த வகையில் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அவர் துணை முதல்வர் பதவியில் நீடிக்கமாட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மிஷ்ராவை கல்லூரி வளாகத்தில் சுற்றி திரிவதற்கு அனுமதித்துள்ளார் என சாட்டர்ஜிக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
