நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்தார்.
இதனையடுத்து, 2022 ஆகஸ்ட் மாதம் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் காவல்துறையால் அவர் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரை கைது செய்து 2025 ஆகஸ்ட் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
தற்போது, டெல்லியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த மீரா மிதுனை, நள்ளிரவில் போலீசார் கைது செய்துள்ளனர். அவரது தாய், “மீரா மிதுன் காணவில்லை” என்று கூறி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், டெல்லி அரசு காப்பகத்தில் அவர் இருப்பதை சென்னை போலீசார் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினர். இதையடுத்து நீதிபதி எஸ். கார்த்திகேயன், மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, ஆகஸ்ட் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
2021-ல் நடைபெற்ற இந்த வழக்கில், வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் அந்த ஆண்டில் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்த பின்னர் மீரா மிதுன் தொடர்ந்து நீதிமன்ற ஆணைகளை மீறியதாலேயே தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
