திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு, மே 19 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளரான வைகோ வருகை புரிந்திருந்தார். அவர் அங்கிருந்து சென்ற பின் விமான நிலையத்திலிருந்த நாம் தமிழர் கட்சியினர் வைகோவிற்கு எதிராக கூச்சலிட்டதால், மதிமுக தொண்டர்கள் நாம் தமிழர் கட்சியுடன் தகராறில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கொடிக்கம்பங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக குறிப்பிடுகிறது. இது தொடர்பாக மதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி இரு தரப்பு கட்சியினர் மீதும் விமான நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்து 7 வருடங்களான நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரான நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சீமான் உள்பட 19 பேரை விடுதலை செய்யும்படி உத்தரவு வழங்கினார்