அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மற்றும் குவீன்ஸ் பகுதிகளில் நடுராத்திரியில் சில மர்ம நபர்கள் பாதாள சாக்கடை எனப்படும் மேன்ஹோல் (Manhole) மூடிகளைத் திறந்து உள்ளே இறங்குவதும், பின்னர் பல மணி நேரம் கழித்து வெளியே வருவதுமான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அங்குள்ள பாதுகாப்பு கேமராக்களில் பதிவான ஒரு வீடியோவில், சுமார் ஏழு பேர் கைகளில் மண்வெட்டி மற்றும் சில விசித்திரமான தோண்டல் கருவிகளுடன் இரவு 11 மணி அளவில் சாக்கடைக்குள் இறங்கி, கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்து அதிகாலை நேரத்தில் வெளியே வந்துள்ளனர்.

இதற்கு முன்பும் மே 5-ஆம் தேதி இதேபோல குவீன்ஸ் பகுதியில் மூன்று பேர் நீர்ப்புகா உடைகளை (Waterproof gear) அணிந்து கொண்டு சாக்கடைக்குள் இறங்கியுள்ளனர். இந்த விசித்திரமான சம்பவத்தால் குழப்பமடைந்த நியூயார்க் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அந்த நபர்கள் சாக்கடைக்குள் ஏதோ மதிப்புமிக்க பொருட்களை (புதையல் போன்றவற்றை) தேடிச் சென்றிருக்கலாம் என பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது வரை அங்கிருந்து வெடிபொருட்களோ, ஆயுதங்களோ அல்லது வேறு எந்த சந்தேகத்திற்குரிய பொருட்களோ கைப்பற்றப்படவில்லை என்றாலும், இந்த மர்ம நபர்களின் பின்னணி குறித்து அமெரிக்க போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.