தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்ற ஜப்பான், கோடைக்கால வெப்ப அலை மற்றும் கடுமையான வெயிலைச் சமாளிக்க மீண்டும் ஒரு புதிய புரட்சியைச் செய்து உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அங்கே உடலிலேயே காற்று வீசி குளிர்ச்சியைத் தரும் உலகின் முதல் ‘ஏசி சட்டை’  அறிமுகப்படுத்தப்பட்டு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த ஏசி சட்டையின் பின்பகுதியில் மிகச் சிறிய, எடை குறைந்த இரண்டு சிறிய மின்விசிறிகள்  பொருத்தப்பட்டுள்ளன.

இந்த விசிறிகள் ரீசார்ஜ் செய்யக்கூடிய சிறிய பேட்டரிகள் மூலம் இயங்குகின்றன. சட்டையில் உள்ள ஃபேன் வெளியில் இருக்கும் காற்றை உறிஞ்சி சட்டையின் உட்புறத்திற்குள் செலுத்துகிறது. இதனால் உருவாகும் காற்று, உடலில் சுரக்கும் வியர்வையை உடனடியாக ஆவியாக்கி, உடலை எப்போதும் சில்லென்று வைத்திருக்க உதவுகிறது.

திறந்தவெளியில் வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள், டெலிவரி செய்யும் ஊழியர்கள் மற்றும் வெயிலில் அதிகம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பொதுமக்களுக்காக இந்த பிரத்யேக ஏசி சட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. வழக்கமான ஆடைகளைப் போலவே இதை அணிந்து கொள்ள முடியும் என்பதுடன், பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் பல மணி நேரங்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்பதும் இதன் கூடுதல் சிறப்பாகும்.

சட்டையைத் தோய்க்க வேண்டிய சூழல் வரும்போது, அதில் பொருத்தப்பட்டுள்ள ஃபேன் மற்றும் பேட்டரி பாகங்களை மிக எளிதாகக் கழற்றி வைத்துவிட்டுத் துவைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய கோடை காலத்தில் ஜப்பானில் இந்த ஏசி ஆடைகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், வரும் நாட்களில் பிற நாடுகளுக்கும் இந்தத் தொழில்நுட்பம் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.