கர்ப்பப்பை (ஓவேரியன்) கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு, வழக்கமான கீமோதெரபி சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காத இறுதி கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக ‘மிர்வெடுக்சிமேப் சொரவ்டான்சின்’ (Mirvetuximab Soravtansine) என்ற புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘Elahere’ என்ற பெயரில் விற்கப்படும் இந்த இலக்கு வைக்கப்பட்ட (Targeted) மருந்து, கடந்த 20 ஆண்டுகளில் மருத்துவ உலகில் கேன்சர் சிகிச்சையில் ஏற்பட்ட மிகப்பெரிய புரட்சியாகக் கருதப்படுகிறது. இது உடலிலுள்ள நல்ல செல்களை அழிக்காமல், கேன்சர் செல்களை மட்டுமே துல்லியமாகக் கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது.

இதன் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில், இந்த மருந்தை உட்கொண்ட பெண்களின் ஆயுட்காலம் வழக்கமான 12.8 மாதங்களில் இருந்து 16.5 மாதங்களாக அதிகரித்துள்ளதுடன், கட்டிகளின் அளவும் கணிசமாகக் குறைந்து, மரண ஆபத்து 33 சதவீதம் வரை குறைந்துள்ளதாக லண்டன் மற்றும் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) உள்ளிட்ட மருத்துவ அமைப்புகள் உறுதி செய்துள்ளன.

வழக்கமான கீமோதெரபியால் ஏற்படும் கடுமையான பக்கவிளைவுகள், உடல் சோர்வு மற்றும் வலிகளைக் குறைத்து, கேன்சர் நோயாளிகள் தங்களின் அன்றாடப் பணிகளைத் தாங்களே கவனித்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை இந்த மருந்து மேம்படுத்துகிறது.

குமட்டல் மற்றும் தற்காலிகக் கண் பார்வை மங்குதல் போன்ற சில சிறிய பக்கவிளைவுகள் இருந்தாலும், இறுதி கட்டப் புற்றுநோயோடு போராடும் இந்தியப் பெண்கள் உள்ளிட்ட உலகளாவிய நோயாளிகளுக்கு, தங்களது குடும்பத்தினருடன் கூடுதல் காலத்தைச் செலவிட இந்த புதிய கண்டுபிடிப்பு ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.