பாஜக மூத்த தலைவரும் பிரபல நடிகருமான எஸ்.வி.சேகர், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த போது தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோரை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அண்ணாமலை ஒரு நேர்மையற்றவர் என்றும், விளம்பரத்திற்காக அவர் எதையும் செய்யக்கூடியவர் என்றும் சாடிய அவர், அண்ணாமலை வாயைத் திறந்தாலே பொய் மட்டும்தான் பேசுவார் என்று அதிரடியாகக் குற்றம் சாட்டினார்.
கடந்த காலங்களில் அதிமுகவின் வாக்குகளை பாஜக பெற்ற சமயத்தில், அது தனது தனிப்பட்ட செல்வாக்கால் தான் கிடைத்தது என்று அண்ணாமலை தொடர்ந்து பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.
அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நோக்கியும் தனது விமர்சனக் கணைகளைத் தொடுத்த எஸ்.வி.சேகர், நேற்று வரை திமுக கூட்டணியில் சொகுசாக இருந்துவிட்டு, இப்போது திடீரென திமுகவை எதிர்த்து விஜய் இப்படிப் பேசக் கூடாது என்று சாடினார்.
அண்ணாமலை மற்றும் விஜய் என இருவரையும் எஸ்.வி.சேகர் ஒரே நேரத்தில் வெளுத்து வாங்கியிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
