அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சின்ன கடைவீதி சாலையில் ரோடு ஷோ சென்றபோது அங்குள்ள மக்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, கடந்த நான்கு ஆண்டுகளாக திமுக ஆட்சியில் எந்த ஒரு பெரிய நலத்திட்டமும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கொடுக்கப்படவில்லை.

அவர்களுக்கு வீட்டு மக்களைப் பற்றி தான் கவலை. நாட்டு மக்கள் குறித்து கவலைப்படுவதில்லை. திமுக என்றாலே வாரிசு அரசியல் அவர்கள் மன்னர் ஆட்சியை தமிழகத்திற்கு கொண்டுவர துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது மு.க. ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துள்ளது.

அதனால் தான் அதிமுக ஆட்சியில்  எந்த ஒரு நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதையே கிடையாது சமீபத்தில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு துணை போலீஸ் சுற்றும் சுந்தரேசனின் வாகனத்தை பறித்து அவமதித்துள்ளனர்.

ஆனால் “ஓரணியில் தமிழ்நாடு” மூலம் திமுகவில்  உறுப்பினராக சேருங்கள் என வீடு வீடாக சென்று வருகிறார் ஸ்டாலின். திமுக ஆட்சியில் மளிகை பொருள் முதல் கட்டுமான பொருள் வரை அனைத்துமே விலை உயர்ந்துள்ளது. அவற்றை குறித்து எந்த கவலையும் இல்லாமல் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி மக்களை ஏமாற்றி வருகிறார் இவ்வாறு அவர் கூறினார்.