இன்றைய காலகட்டத்தில் மத ரீதியிலான கருத்துக்கள் சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி வரும் வேளையில், உணவு மற்றும் பார்சல் விநியோகம் செய்யும் டெலிவரி பாய் ஒருவருக்கு வந்த குறுஞ்செய்தியும், அதன் பின்னால் இருந்த நெகிழ்ச்சியான உண்மையும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஃப்தாப் கான் என்ற டெலிவரி ஊழியர், வாடிக்கையாளர் ஒருவருக்குப் பார்சலை டெலிவரி செய்யச் சென்றபோது, அவரது மொபைல் செயலியில் (App) “முஸ்லிம் டெலிவரி பாய் மூலம் எனது பார்சலை அனுப்ப வேண்டாம்” என்ற வாடிக்கையாளரின் பழைய மெசேஜ் குறிப்பு  காட்டப்பட்டுள்ளது.

இதைப் பார்த்து மிகுந்த மனவேதனையடைந்த அஃப்தாப், “நம் நாடு எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று தெரியவில்லை, இதைப் பார்க்கும்போது மிகவும் வத்தமாக உள்ளது” என்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். மேலும், அந்த வாடிக்கையாளரை நேரில் சந்தித்து உங்களுக்கு இந்த பார்சல் வேண்டுமா, வேண்டாமா என்று கேட்கவும் அவர் துணிந்தார்.

https://www.instagram.com/reel/DYkRBWxR3gd/?igsh=MTBjZHk2NGFrNWMzZA==

ஆனால், அஃப்தாப் கான் அந்த வாடிக்கையாளரின் வீட்டிற்கு நேரில் சென்றபோது, அங்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு உண்மை வெளிவந்தது. அந்த வாடிக்கையாளர், தான் பல காலத்திற்கு முன்பு ஏதோ ஒரு கோபத்தில் அந்த வாசகத்தை அப்ளிகேஷனில் எழுதிவிட்டதாகவும், ஆனால் தற்போது அதை எவ்வாறு நீக்குவது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் கூறி அஃப்தாபிடம் மனமாற மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும், லிப்ட் வசதி இல்லாத தனது மூன்றாவது மாடி வீட்டிற்குத் தேடி வந்து பார்சல் வழங்கிய அஃப்தாபின் மனிதநேயத்தைக் கண்டு அவர் நெகிழ்ந்துபோனார்.

உடனே அஃப்தாப், அந்த வாடிக்கையாளரின் மொபைலை வாங்கி, செயலியின் ‘How to Reach’ பகுதிக்குச் சென்று அந்த வெறுப்பு வாசகத்தை நீக்கிக் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தின் முடிவில் பேசிய அஃப்தாப், “நாம் அனைவரும் சகோதரர்கள்; மதத்தில் ஒன்றும் இல்லை, நாம் அனைவரும் இந்தியர்கள், நம் நாட்டை மேலும் அழகாக்க அன்பைப் பரப்புவோம்” என்று நேர்மறையாகப் பேசியுள்ளார். வெறுப்பிற்குப் பதிலாக அன்பை விதைத்த அஃப்தாபின் இந்த வீடியோவை கோடிக்கணக்கான மக்கள் பார்த்துப் பாராட்டி வருகின்றனர்.