மகாராஷ்டிராவின் எல்லோரா பகுதியில் வசித்து வந்த மாவட்டப் பரிஷத் பள்ளி ஆசிரியர் சுரேஷ் ரூப்சந்த் போர்சே, கடந்த புதன்கிழமை இரவு வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமும், தனக்குச் சளி மருந்து வாங்கவும் கடைக்குச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடியபோது, அவரது மருமகன் அலறியபடி ஓடிவந்து, “மாமாவை யாரோ காரில் கடத்திச் சென்று அடிக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். பதறிப்போன அவரது மனைவி அனிதா போர்சே மற்றும் மகள்கள் சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்றபோது, ஒரு கருப்பு நிற ஸ்கார்பியோ காரில் இரண்டு பேர் சுரேஷைப் பிடித்து வைத்திருந்ததைக் கண்டுள்ளனர்.

தன் மனைவியைப் பார்த்ததும் “என்னை எப்பாடியாவது காப்பாற்று…” என்று சுரேஷ் கதறியுள்ளார். அவரது மகள் காரை மறித்துத் தனது தந்தையை விடுவிக்குமாறு கெஞ்சியபோது, காரில் இருந்தவர்கள் “நாங்கள் போலீசார், அரசுப் பணியில் தடுத்தால் உள்ளே தள்ளிவிடுவோம்” என மிரட்டி, அவர்களைத் தள்ளிவிட்டுள்ளனர். பின்னர், அங்கு வந்த 7 முதல் 8 பேர் சுரேஷை காரில் இருந்து தூக்கி வெளியே வீசியுள்ளனர். அதற்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த சுரேஷை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அவரது மனைவி அனிதா, “என் கணவர் எந்தத் தப்பும் செய்யாதவர்; அவரைத் திட்டமிட்டுக் கொலை செய்துவிட்டு, தற்போது போலீசார் இந்த வழக்கைத் திசைதிருப்பவும், உண்மைகளை மறைக்கவும் முயற்சிக்கிறார்கள்” என்று கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ஜிகேடி மருத்துவமனையில் சுரேஷின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு இதய நோய் இருந்ததாகவும், இதய ரத்த நாளங்களில் அடைப்பு இருந்ததாகவும் மருத்துவர்கள் முதற்கட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். எனினும், மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய அவரது உடற்கூறுகள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தச் சந்தேக மரணம் தொடர்பாக மொத்தம் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.