உலக நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நமது சுவாச உறுப்பான நுரையீரலின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு அடைவது அவசியமாகிறது. பொதுவாகவே புகைபிடித்தல்  மட்டுமே நுரையீரலைப் பாதிக்கும் அல்லது நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்ற எண்ணம் நம்மில் பலரிடமும் ஆழமாகப் பதிந்துள்ளது. ஆனால், சிகரெட் பழக்கம் இல்லாதவர்களுக்கும் நுரையீரல் சார்ந்த நோய்களும் புற்றுநோயும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதுதான் கசப்பான உண்மை.

நாம் தினசரி வாழ்க்கையில் அறியாமல் செய்யும் சில தவறான பழக்கவழக்கங்களே இதற்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. முதலாவதாக, நாம் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காற்று மாசுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. வாகனங்களின் புகை, தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் தூசிகள் நிறைந்த காற்றை தினமும் சுவாசிப்பது சிகரெட் புகையைச் சுவாசிப்பதற்குச் சமமான பாதிப்பை நுரையீரலுக்கு ஏற்படுத்துகிறது.

அதேபோல், புகைபிடிப்பவர்களின் அருகில் நின்று அந்தப் புகையை நாம் சுவாசிப்பது நேரடியாகப் புகைபிடிப்பதை விடவும் அதிக ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இரண்டாவதாக, நமது வீட்டிற்குள் இருக்கும் காற்று மாசுபாட்டையும் நாம் கவனிக்கத் தவறுகிறோம். சமையலறையில் சரியான காற்றோட்ட வசதி  இல்லாதபோது உருவாகும் புகை, தரமற்ற கொசுவர்த்திச் சுருள்கள் மற்றும் நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்படும் ரசாயனக் ஸ்ப்ரேக்கள் போன்றவை சுவாசப் பாதையில் மெதுவாக நஞ்சைக் கலக்கின்றன.

இது தவிர, உடற்பயிற்சி செய்யாமல் முடங்கிக் கிடப்பது மற்றும் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்றவை நுரையீரலில் சளி மற்றும் நச்சுகள் தங்குவதற்கு வழிவகுத்து, அதன் செயல்பாட்டுத் திறனைக் கணிசமாகக் குறைக்கின்றன. எனவே, நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கச் சிகரெட் பழக்கத்தைத் தவிர்ப்பது மட்டும் போதாது.

மாசடைந்த காற்றிலிருந்து தப்பிக்க முகக்கவசம் அணிவது, சமையலறை மற்றும் வீடுகளில் நல்ல காற்றோட்ட வசதியை ஏற்படுத்துவது, தினமும் எளிய மூச்சுப்பயிற்சிகளை மேற்கொள்வது என அன்றாட பழக்கவழக்கங்களில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். ஆரம்பக்கட்டத்திலேயே இந்தச் சிறு தவறுகளைத் திருத்திக் கொண்டால், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளில் இருந்து நம்மை நாம் முழுமையாகத் தற்காத்துக் கொள்ள முடியும்.