இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கும், தூக்க மாத்திரைகளைச் சார்ந்திருப்பவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. இனி தூக்கமின்மைப் பிரச்சினைக்கு மாத்திரைகள் சாப்பிட வேண்டிய அவசியமில்லை, நெற்றியில் ஒரு சிறிய ‘பேட்ச்’  ஒட்டினாலே போதும், ஆழ்ந்த தூக்கம் வரும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

நாம் தூங்கும்போது நம் மூளை பல நிலைகளில் ஓய்வெடுக்கிறது. அதில் ‘ரெம் ஸ்லீப்’  எனப்படும் தூக்க நிலை மிகவும் முக்கியமானது. இந்த நிலையில்தான் கனவுகள் அதிகம் வரும்; மேலும் மூளை நினைவுகளை ஒழுங்குபடுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் இது உதவுகிறது. தூக்கம் சரியாகக் கிடைக்காத பட்சத்தில் மறதி, நாள் முழுவதும் சோர்வு மற்றும் மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

இதற்காக அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ‘நியூ ஸ்லீப்’  என்ற மென்மையான பேட்ச் ஒன்றை உருவாக்கியுள்ளனர். நெற்றியில் ஒட்டிக்கொள்ளும் இந்த பேட்ச், மிகவும் மென்மையான அல்ட்ராசவுண்ட்  அலைகளை மூளைக்கு அனுப்பி, ரெம் தூக்கத்தைத் தூண்டுகிறது. இதனால் தூக்க மாத்திரைகள் தேவையின்றி இயல்பாகவே ஆழ்ந்த தூக்கம் பெற முடிகிறது.

28 பேரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வில், இந்த பேட்சைப் பயன்படுத்தியவர்கள் சராசரியாக 43 நிமிடங்கள் விரைவாக ரெம் தூக்க நிலையை அடைந்தது கண்டறியப்பட்டது. மேலும், அவர்கள் ரெம் தூக்கத்தில் சுமார் 16 நிமிடங்கள் கூடுதலாக இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தூக்கமின்மையால் தவிப்பவர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு சிறந்த தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.