இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் நிலவி வரும் தலைமுறை இடைவெளியையும், மாறிவரும் தொழில் விருப்பங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் விவாதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அங்கித் கேடியா என்பவர் தனது ‘X’ பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவின்படி, அவரது உறவினர் வீட்டு இளைஞர் ஒருவருக்குப் பன்னாட்டு நிறுவனம் (MNC) ஒன்றில் ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
இந்த மிகப்பெரிய சாதனைக் கொண்டாட்டத்திற்குரியதாக இருக்க வேண்டிய சூழலில், அந்த இளைஞரின் தந்தை இதில் சிறிதும் மகிழ்ச்சியடையவில்லை. மாறாக, அந்த கார்ப்பரேட் வேலையை நிராகரித்துவிட்டு, அரசுத் தேர்வுகளுக்கு தொடர்ந்து படிக்குமாறு தனது மகனைக் கட்டாயப்படுத்தியுள்ளார். தந்தையின் இந்த பிடிவாத போக்கு, தற்போதைய இளைஞர்களின் வேலைவாய்ப்புத் சுதந்திரம் குறித்த புதிய விவாதத்தை இணையத்தில் உருவாக்கியுள்ளது.
Went to visit a relative whose son just got placed at an MNC with a ₹15 LPA package. Instead of celebrating, his father is forcing him to prepare for government jobs because, according to him, that’s the only “real” job.
Apparently, he saw news about layoffs at companies like…
— Ankit Kedia (@Ankittskedia) June 11, 2026
உலகளாவிய ஐடி துறையில், குறிப்பாக அடோப் (Adobe), மைக்ரோசாப்ட் (Microsoft) போன்ற முன்னணி நிறுவனங்களில் அண்மைக்காலமாக நடந்து வரும் ஊழியர் பணிநீக்க செய்திகளே அந்தத் தந்தையின் இந்த முடிவுக்குக் காரணம் என்று அங்கித் கேடியா குறிப்பிட்டுள்ளார். தனியார் துறையில் எவ்வளவு பெரிய சம்பளம் மற்றும் வளர்ச்சி இருந்தாலும், அங்கு நீண்ட கால வேலை உத்தரவாதம் கிடையாது என்றும், அரசு வேலை மட்டுமே ‘உண்மையான மற்றும் நிலையான வேலை’ என்றும் அந்தத் தந்தை நம்புகிறார்.
இந்த விவாதத்தில் நெட்டிசன்கள் இருவேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு தரப்பினர், “தனியார் துறையில் எந்த நேரத்திலும் வேலை பறிபோகலாம் என்பதால் தந்தையின் கவலை நியாயமானது தான், ஆனால் அதற்காக மகனைக் கட்டாயப்படுத்துவது தவறு” என்று கூறியுள்ளனர். மற்றொரு தரப்பினரோ, பெற்றோர்கள் தங்களது நிறைவேறாத கனவுகளை பிள்ளைகள் மீது திணிப்பது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று சாடியுள்ளனர்.
