ஜலந்தரின் கேவல் விஹார் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 37 வயதான அரசு பெண் மருத்துவர் மீனாட்சி சூத், கடந்த ஜூன் 10 புதன்கிழமை காலை அவரது வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கபுர்தலா சிவில் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த ஓராண்டாகத் தனியாக வசித்து வந்துள்ளார். வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், போலீசார் கதவை  உடைத்து உள்ளே சென்று அவரது உடலைக் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அவரது கணவரும், ‘நேஷனல் ஐ கேர்’ என்ற புகழ்பெற்ற கண் மருத்துவமனையை நடத்தி வரும் பிரபல கண் மருத்துவருமான டாக்டர் பியூஷ் சூத் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

மீனாட்சியின் தற்கொலைக்கு அவரது கணவரின் கள்ளத்தொடர்பு, வரதட்சணை கொடுமை மற்றும் பல கோடி ரூபாய் பண மோசடி ஆகியவையே காரணம் என அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். டாக்டர் பியூஷ் சூத் தனது மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியர் ஒருவருடன் தவறான உறவில் இருந்ததை மீனாட்சி கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அதனை போலீசார் ஆதாரமாகக் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், 2018-ல் திருமணமான புதிதில் கணவரின் மருத்துவமனைக் கட்டுமானத்திற்காக மீனாட்சி 35 லட்ச ரூபாய் கடன் வாங்கித் தனது அரசு சம்பளத்தில் இருந்து தவணை செலுத்தியுள்ளார். சமீபத்தில் அவர் தனியாக வீடு வாங்க வங்கிக்குச் சென்றபோது, அவரது கையெழுத்தைப் போலியாகப் போட்டு, அவரது பெயரில் 2.5 கோடி ரூபாய் அளவிற்குப் பெருந்தொகை கடன் வாங்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்துத் தட்டிக்கேட்ட போது, கணவர் மற்றும் மாமனாரால் மீனாட்சிக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஜூன் மாதமே கணவர் தன்னைத் கழுத்தை  நெரித்துக் கொல்ல முயன்றதாகப் போலீசில் மீனாட்சி புகார் அளித்துள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள டாக்டர் பியூஷ் சூதைத் தேட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூடுதல் துணைக் காவல் ஆணையர் ராகேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.