ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்த ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன என்று பின்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அரசுமுறைப் பயணமாக பின்லாந்து சென்றுள்ள அவர், சர்வதேச அரசியல் சூழல் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசுகையில், இந்தியத் தயாரிப்பு ஆயுதங்களால் எந்த ஐரோப்பிய நாடும் தாக்கப்படுவதில்லை என்றும், ஆனால் ஐரோப்பிய நாடுகளின் ஆயுதங்கள் பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், சந்தையில் கிடைக்கும் இருப்பு மற்றும் விலை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தியா தனது முடிவுகளை எடுப்பதாகக் கூறினார்.

வழக்கமாக ரஷ்ய எண்ணெயை அதிகமாக வாங்கிய ஐரோப்பிய நாடுகள், பின்னர் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து வாங்கத் தொடங்கியதால் தான், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது என்றும் அவர் விளக்கமளித்தார்.