மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை அருகே பேலாப்பூர் பகுதியில் ஆரவ் ஸ்ரீவஸ்தவா (16) என்னும் சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6 ம் தேதி நெருல் ரயில் நிலையத்தில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் பெட்டியின் மீது ஏறி நின்று ஆரவ் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.

அந்த சமயத்தில் அவர் தனது கைகளை உயர்த்திய நிலையில் எதிர்பாராத விதமாக மின்சார கம்பியில் பட்டதால் தூக்கி வீசப்பட்டார். அதில் சிறுவனின் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருடைய நண்பர்கள் காவல் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஆரவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் உடல் நிலை மோசமானதால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டார். அங்கு 6 நாட்கள் சிகிட்சையிலிருந்த நிலையில் நேற்று சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.