இன்றைய நவீன காலகட்டத்தில் கைநிறைய ஐடி (IT) துறையில் சம்பளம் வாங்கினாலும், முறையான நிதி மேலாண்மை இல்லையென்றால் மாத இறுதியில் எப்படி நடுத்தெருவிற்கு வர நேரிடும் என்பதற்கு உதாரணமாக, 30 வயதான ஒரு இளம் தம்பதியின் கதை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான இரண்டு ஆண்டுகளேயான இந்த தம்பதிக்கு மாதத்தின் கூட்டு வருமானமாக 1.7 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. ஆனால், ஆடம்பர வாழ்க்கை மற்றும் கடன்களால் மாத இறுதியில் இவர்களது கையில் வெறும் 2,520 ரூபாய் மட்டுமே மிஞ்சுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தம்பதி, பிரபல சமூக வலைதளமான ‘ரெட்டிட்’ (Reddit) பக்கத்தில், “1.7 லட்சம் சம்பாதித்தும் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்கிறோம், மனதளவில் சோர்வடைந்து விட்டோம், உங்கள் ஆலோசனை தேவை” என்ற தலைப்பில் தங்களின் அவல நிலையை பதிவிட்டுள்ளனர். தங்களின் எதிர்கால கனவுகளான சொந்த வீடு, குழந்தை மற்றும் ஓய்வூதிய வாழ்க்கை ஆகியவற்றை எப்படி எதிர்கொள்வது, அவசர கால நிதி  எப்படி சேமிப்பது என்று தெரியாமல் தவிப்பதாக அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த பதிவின்படி, இந்த தம்பதி மாதந்தோறும் 85,980 ரூபாயை இஎம்ஐ (EMI) கடனாக மட்டுமே செலுத்தி வருகின்றனர். இதில் பர்சனல் லோனுக்காக 70,154 ரூபாயும், பைக் லோனுக்காக 12,000 ரூபாயும், கல்விக்கடனாக 3,000 ரூபாயும், போன் இஎம்ஐ ஆக 826 ரூபாயும் அடங்கும். இதுதவிர, வீட்டு வாடகை, மளிகை, மின்சாரம், மருத்துவச் செலவு என அத்தியாவசிய தேவைகளுக்கு 53,500 ரூபாய் செலவாகிறது. மேலும், தங்களின் தனிப்பட்ட செலவுகள், ஊர் சுற்றுவது மற்றும் பொழுதுபோக்கிற்காக மாதந்தோறும் 28,000 ரூபாயை தனியாக செலவிடுகின்றனர்.

இந்த கணக்குகளைப் பார்த்த நெட்டிசன்கள் அவர்களுக்கு அதிரடி ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். “உங்களின் அத்தியாவசிய செலவுகள் பிரச்சனையல்ல, உங்களை வாட்டும் பர்சனல் லோன் தான் அசல் வில்லன். முதலில் உங்களது ஆடம்பர சுற்றுலாவை நிறுத்திவிட்டு, அந்த பணத்தைக் கொண்டு கடனை முடியுங்கள்” என்றும், “தற்போதைய ஐடி சந்தைக்கு ஏற்ப உங்களது சம்பளம் குறைவுதான், உடனடியாக வேறு நிறுவனத்திற்கு மாறி வருமானத்தை உயர்த்துங்கள்” என்றும் நெட்டிசன்கள் காரசாரமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.