சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் சார்பில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழாவில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது போதைப்பொருள் விழிப்புணர்வுக்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 3 கிலோமீட்டர் ஓடியதைச் சுட்டிக்காட்டிப் பேசிய சீமான், “3 கி.மீ., 12 கி.மீ. ஓட்டம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் போதைப்பொருள் பிரச்சினை தீராது. போதைப்பொருளை ஓடி ஒழிக்கக் கூடாது, தேடி ஒழிக்க வேண்டும். 12 கிலோமீட்டர் நான் ஓடுகிறேன், என்னோடு ஓட முதல்வர் விஜய் தயாரா?” என நேரடி சவால் விடுத்தார்.

.மேலும், முதல்வரைப் போலச் சிரித்துக் காட்டி விமர்சித்த அவர், “அரசே நடத்தும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுவதும் போதைப்பொருள்தானே? சில கடைகளை மூடிவிட்டதாக விளம்பரம் செய்வதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை” என்றும் சாடினார்.

தொடர்ந்து அரசின் விளம்பர உத்திகளைக் கடுமையாகச் விமர்சித்த சீமான், பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அரசு திட்டங்களுக்காகக் கோடி கோடியாய்ச் செலவு செய்து விளம்பரம் செய்வதை சுட்டிக்காட்டினார். “பெண்கள் பாதுகாப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்கு விளம்பரம் கொடுப்பதற்குப் பதிலாகச் செயல்பாடே முக்கியம்” என்று வலியுறுத்தியவர், தற்போதைய ஆட்சி விளம்பரத்திற்காக மட்டுமே நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டும் வகையில், “ஒன்லி ரீல்ஸ் தான், நோ ரூல்ஸ்” என்று தமக்கே உரிய பாணியில் விமர்சித்தார்.

கரூர் கூட்ட நெரிசல் விபத்து குறித்து முதலமைச்சர் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பிய சீமான், “மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், விபத்திற்கு காரணம் யார்? பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை கொடுத்து அவர்களை விலைக்கு வாங்குவது ஏன்?” என்று கேட்டார். மேலும், பென்ஸ் கார் சர்ச்சை குறித்து விளக்கமளித்த அவர், “மக்கள் அளிக்கும் திரள்நிதியில் ஒரு தேநீர்கூட நாங்கள் அருந்த மாட்டோம். என் மீது கூறப்படும் திரள்நிதி திருட்டு குற்றச்சாட்டு முற்றிலும் பொய். அந்த பென்ஸ் கார் எனது மாமா சொந்தப் பணத்தில் வாங்கி வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றது, அது எனக்குச் சொந்தமானது அல்ல” என்று முற்றுப்புள்ளி வைத்தார்.

தனது உரையின் நிறைவாக, தமிழகத்தின் தற்போதைய அரசியல் களம் குறித்துப் பேசிய சீமான், “இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்று கொலை வெறியில் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். தாம் நேரடியாகவே களமிறங்கக்கூடும் என்பதை உணர்த்தும் வகையில் அவர் வெளியிட்ட இந்தச் சூசகமான அறிவிப்பு, வரவிருக்கும் இடைத்தேர்தல் களத்தைச் சூடாக்கியுள்ளதோடு, நாம் தமிழர் கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.