உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூரில், கல்லூரி கிளார்க்கும் ஜிம் உரிமையாளருமான தேவ்தத் சர்மா (52) என்பவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்சவாபகுதியில் வசித்து வந்த தேவ்தத் சர்மா, பாலாஜி குழுமக் கல்லூரியில் கிளார்க்காகப் பணியாற்றி வந்ததோடு, கடந்த 26 ஆண்டுகளாக ‘ராக் ஜிம்’ ஒன்றையும் நடத்தி வந்தார். வழக்கம்போல் சனிக்கிழமை மாலையில் கல்லூரி மற்றும் ஜிம் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவர், இரவு உணவு சாப்பிட்ட பின்னர் தனது அறையில் நாட்டுத் துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி சீமா ராணி மற்றும் அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தற்கொலை செய்துகொள்ளும் சில நிமிடங்களுக்கு முன்பு, தேவ்தத் சர்மா தனது மருமகள் நேஹா சர்மாவுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி காவல்துறை விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. அந்தச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இனிமேலும் இந்த அவமானத்தை என்னால் தாங்க முடியாது. பலமுறை சாவதைவிட ஒரேமுறையாக செத்துவிடுவது மேல். என் உடலை என் மனைவி சீமா ராணி தொடக்கூடாது. எனது இறுதிச் சடங்கிற்காக பொட்டிகளைப் பயன்படுத்த வேண்டாம், அதில் அதிக பணத்தையும் செலவிட வேண்டாம். என் ஆன்மா சாந்தியடைய எந்தவிதமான மதச் சடங்குகளும் செய்யப்படக் கூடாது; என் ஆன்மா அப்படியே அலைந்து திரிய வேண்டும் என்று விரும்புகிறேன். என் தாயை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேவ்தத் சர்மாவுக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் அபிஷேக் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் ஆதித்யா சண்டிகரில் தடயவியல் அறிவியல் பயின்று வருவதுடன், தேசிய அளவிலான தங்கப் பதக்கம் வென்ற பவர் லிஃப்ட்டர் ஆவர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காவல்துறை கண்காணிப்பாளர் பவன் குமார், காவல் நிலையப் பொறுப்பாளர் பிரவேஷ் குமார் சர்மா மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழுவினர் விரைந்து வந்து தடயங்களைச் சேகரித்தனர். மேலும் நாட்டுத் துப்பாக்கியைக் கைப்பற்றினர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், “முதல் கட்ட விசாரணையில் இது தற்கொலை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மருமகளுக்கு அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் செய்தி மற்றும் தற்கொலைக் குறிப்பு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தினரிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.
