சமூக வலைதளங்களில் தங்களின் அந்தரங்க விபரங்களையும், சொத்து விபரங்களையும் விளம்பரப்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு உதாரணமாக, மத்திய பிரதேச மாநிலம் சிவபுரியைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ரச்னா குர்ஜார் என்பவரது வீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ரச்னா, தனது வீடியோக்களில் தனக்கு சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை டேபிளில் அடுக்கி வைத்து, அவற்றின் விலையையும் கூறி வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பல்லாயிரக்கணக்கான வியூஸ்களைப் பெற்றுத் தந்துள்ளன. ஆனால், இதையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், ரச்னாவின் வீடியோக்களை மிக நுணுக்கமாகப் பார்த்து, அவரது வீட்டில் எந்தெந்த நகைகள் எங்கு இருக்கும் என்பதை முன்கூட்டியே ஸ்கெட்ச் போட்டு திட்டமிட்டுள்ளனர்.
View this post on Instagram
சம்பவத்தன்று நள்ளிரவு ரச்னாவின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள், மிகவும் சாதுரியமாக வீட்டின் வெளியில் இருந்த சிசிடிவி கேமராக்களை வேறு பக்கமாகத் திருப்பி வைத்துள்ளனர். பின்னர், வீட்டின் பாதுகாப்பு வேலிகளை வெட்டி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்கள் யாரும் வெளியில் வராதவாறு அறைகளைப் பூட்டியுள்ளனர். அதன்பின், வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், தங்க மாங்கல்யம், மோதிரங்கள் மற்றும் வெள்ளி நகைகளை அள்ளிக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
மறுநாள் காலையில் விடிந்து பார்த்த போதே தங்களின் வீடு கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ரச்னா குர்ஜாரின் பழைய நகை வீடியோக்கள் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றன. ஆனால், நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக, “இன்னும் நல்லா நகையைக் காட்டுங்க, இப்ப அனுபவியுங்க” என்று கமெண்ட் செக்ஷனில் விபரீதமாக டிரோல் செய்து (Troll) கலாய்த்து வருவது சோஷியல் மீடியாவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
