பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில், திருமணமான பெண் மஞ்சு குமாரி மற்றும் அவரது 6 வயது மகன் ஆர்யன் குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 27-ஆம் தேதி தோட்டம் அருகிலுள்ள புதரில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், பின்னர் அது காந்தி பகுதியைச் சேர்ந்த மஞ்சு குமாரி என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து மஞ்சு குமாரியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முதலில் ஹரி பஸ்வான் என்பவரை கைது செய்த போலீஸார், தொடர்ந்து தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியும் மஞ்சு குமாரியின் காதலருமான விகாஸ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மஞ்சு குமாரிக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்திருந்ததும், பள்ளி பருவத்திலிருந்தே விகாஸ் குமாருடன் காதல் உறவில் இருந்ததும் தெரியவந்தது. திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தொடர்பில் இருந்த நிலையில், மஞ்சு வேறு ஒருவருடனும் பழகுவதாக சந்தேகமடைந்த விகாஸ், கடந்த ஜூலை 23-ஆம் தேதி மஞ்சுவையும், அவரது 6 வயது மகன் ஆர்யனையும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அடையாளம் தெரியாமல் இருக்க இருவரின் முகத்திலும் ஆசிட் ஊற்றியதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

விகாஸ் குமார் அளித்த தகவலின் பேரில், விஷுன்பூர் சுமேர் பகுதியில் உள்ள புதரில் இருந்து சிறுவன் ஆர்யன் குமாரின் சடலத்தையும், பச்சை நிற திரவம் இருந்த அமிலப் பாட்டிலையும், மஞ்சு குமாரியின் செல்போனையும் போலீஸார் மீட்டனர். கொலைச் சம்பவத்தை ஆர்யன் நேரில் பார்த்ததால், உண்மை வெளியேறிவிடும் என்ற அச்சத்தில் அவரையும் கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.