தமிழக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஒரு மாத கால ஆட்சியை விமர்சித்து எக்ஸ் தளத்தில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், நியாயம், நீதி, உண்மை, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவையே ‘தூயசக்தி’ என்று குறிப்பிட்ட அவர், இந்த ஆட்சியில் அவை எதுவுமே இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

யூடியூபர் மாரிதாஸ் கைது, திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம், மின்சாரத்துறையில் காணாமல் போன ஹார்டு டிஸ்க்குகள் விவகாரம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.

மேலும், ஆட்சியமைக்க மறைமுகமாகப் பேரம் பேசியது மற்றும் அமைச்சர்களின் கள ஆய்வுகள் வெளிப்படைத்தன்மையற்றவை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

எந்தவொரு துறையிலும் தவெக அரசு வெளிப்படையாகச் செயல்படவில்லை என்று குறிப்பிட்ட எச். ராஜா, பாரதியாரின் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு, தன்னை ‘தூயசக்தி’ என்று அழைத்துக்கொள்ளும் இந்த அரசு, உண்மையில் ‘தீயசக்தி’ திமுகவின் நீட்சியே தவிர வேறில்லை என்று காட்டமாகத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.