நார்வே செஸ் 2026 சர்வதேசப் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசுக்கான காசோலையையும் அவர் வழங்கினார்.

அப்போது, முதலமைச்சர் விஜய் அவர்கள் பிரக்ஞானந்தாவுடன் சுமார் 15 நிமிடங்கள் செஸ் விளையாடிய சுவாரசியமான வீடியோ இணையத்தில் வெளியாகி, இன்று ஒட்டுமொத்த சமூக வலைதளங்களிலும் பயங்கர வைரலாகப் பரவி வருகிறது. ​இந்நிலையில், இந்த வீடியோவை மையமாக வைத்து தமிழக அரசியல் களம் எக்ஸ் வலைதளத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

முதலமைச்சர் விஜய் செஸ் விளையாடும் இந்த தற்போதைய வீடியோவையும், இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செஸ் போட்டி ஒன்றில் விளையாடிய பழைய வீடியோவையும் ஒன்றாக இணைத்து தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) சமூக வலைதளங்களில் செம்மையாக வைரலாக்கி வருகின்றனர்.

“யார் உண்மையாகவே செஸ் விளையாடுகிறார்கள் பாருங்கள்” என்ற ரீதியில் தவெக தொண்டர்கள் இந்த வீடியோக்களை ஒப்பிட்டுப் பகிர்ந்து வருவது, தற்போதைய ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களிடையே இணையத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.