ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள லோக்நாயக ஜெய்பிரகாஷ் சிவில் மருத்துவமனைக்கு, 15 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது அங்கு ஓபிடி (OPD) பிரிவில் பணியில் இருந்த டாக்டர் ஷைலேந்திர குமார் ஷைல் என்ற காம கொடூரன், அந்தச் சிறுமியைத் தனது அறைக்குள் வைத்துத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த டாக்டர் ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டும் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அரசால் பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும், அப்படிப்பட்டவனுக்கு மீண்டும் எப்படி அரசு வேலை கிடைத்தது என்ற மிகப்பெரிய கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ​இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து, ஹரியானா மாநில மகளிர் ஆணையத் தலைவி ரேணு பாட்டியா அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அந்த மருத்துவமனைக்கு அதிரடியாகச் சென்று ஆய்வு நடத்தினார்.

அப்போது அங்கிருந்த பெண் ஊழியர்கள் மற்றும் நர்ஸ்கள் யாரும் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் துணையாக இல்லாததைக் கண்டு கொதித்தெழுந்த அவர், “உங்க சொந்த மகளாக இருந்தால் இப்படி ஒரு ஆம்பளையோடு 15 நிமிடம் தனியாக விட்டுட்டுப் போவீங்களா?” என்று பிஎம்ஓ (PMO) டாக்டர் சாரா அகர்வால் மற்றும் நர்ஸ்களைப் பார்த்துக் கடுமையாகத் திட்டித் தீர்த்தார். மேலும், பெண் ஊழியர்களின் இந்த அலட்சியத்தால் பிஎம்ஓ-வை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய சுகாதாரத் துறைக்குக் கடிதம் எழுதப் போவதாகவும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.