நவீன காலத் திருமணங்கள் மற்றும் உறவுகளில் பணம், அதிகாரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து குருகிராமைச் சேர்ந்த பிரபல நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) ஒருவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவர் தனது பதிவில், “பெண்கள் தங்களின் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் போது, சம்பந்தப்பட்ட நபர் மிகப்பெரிய பணக்காரர் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் அவரைத் திருமணம் செய்யக் கூடாது.
ஒரு உறவின் அடித்தளம் வெறும் பொருளாதார நிலையை மட்டுமே சார்ந்து அமைக்கப்படும் போது, அங்கு பரஸ்பர மரியாதையும் சமத்துவமும் கேள்விக்குறியாகிறது. இத்தகைய திருமண வாழ்க்கையில் ஏதேனும் ஒரு தரப்பிடம் மட்டுமே அதிக அதிகாரமும், கட்டுப்பாடும்சென்று சேர அதிக வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்குப் பணத்தை விட பரஸ்பர மரியாதை, புரிதல், ஒரே மாதிரியான சிந்தனைகள் மற்றும் உணர்வுபூர்வமான பிணைப்பு ஆகியவையே மிக முக்கியம் என்றும், பணம் வாழ்க்கையை எளிதாக்குமே தவிர உறவை பலப்படுத்தாது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் குவிந்து வருகின்றன.
மேலும் ஒரு தரப்பினர் சிஇஓ-வின் கருத்தை ஆதரித்தாலும், மறுதரப்பினர் “எதிர்காலப் பாதுகாப்பிற்குப் பொருளாதார ஸ்திரத்தன்மை மிகவும் அவசியம், அதில் எந்தத் தவறும் இல்லை” என எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், இந்த அறிவுரை பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் சமமாகப் பொருந்தும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருவதால், நவீன காலத்தில் திருமணத்திற்கான உண்மையான அடிப்படை எது என்ற விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
