பீகார் தலைநகர் சுல்தான்கஞ்ச் பகுதியில் ஜிதேந்திர மாத்தோ என்பவர் வசித்து வருகிறார். வக்கீலான இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தனது வீட்டிற்கு அருகே உள்ள டீக்கடைக்கு சென்றார். அங்கு டீ அருந்தி கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்மநபர் ஒருவர் மாத்தோ மீது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதில் மாத்தோ ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாத்தோ உயிரிழந்துவிட்டார். இதேப்போன்று சரண் மாவட்டத்தில் ஆசிரியரான சந்தோஷ் ராய் என்பவர் தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அவர்கள் பிசாகி பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சந்தோஷ் ராய் மற்றும் அவரது நண்பர் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் சந்தோஷ் ராய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரது நண்பர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை வலை வீசி தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
