வேலை முடிந்து நள்ளிரவில் தங்களது வீட்டிற்குத் திரும்பிய இரண்டு சகோதரர்களுக்குப் பேரதிர்ச்சி ஒன்று காத்துக்கொண்டிருந்தது. அவர்களின் வீட்டின் கதவு எதிர்பாராதவிதமாக உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டது. கையில் சாவி இல்லாததால் உள்ளே செல்ல முடியாமல் தவித்த அந்த அண்ணன்கள் இருவரும், உடனடியாகத் தங்களது சகோதரியைத் தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளனர். அப்போது யாரும் சற்றும் எதிர்பாராத ஒரு ‘குட்டி’ கருவியைப் பயன்படுத்தி அவர்கள் வீட்டின் கதவைத் திறந்த சுவாரசியமான வீடியோ தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

​அந்த சகோதரி, அண்ணன்களின் கஷ்டத்தைக் கேட்டுவிட்டு, ஒரு புதிய யோசனையுடன் தனது சின்னக் குழந்தையை கூட்டிக்கொண்டு அங்கு வந்துள்ளார். அந்த வீட்டின் கதவுக்கு அருகே உள்ளே செல்வதற்காக ஒரு சிறிய துவாரம் (ஓட்டை) இருந்துள்ளது. பெரியவர்கள் யாரும் நுழைய முடியாத அந்தச் சிறிய ஓட்டைக்குள், சாமர்த்தியமாக அந்தச் சின்னக் குழந்தையை மெதுவாக உள்ளே அனுப்பி வைத்துள்ளனர்.

உள்ளே சென்ற அந்தச் சுட்டிப் பெண், மிக அழகாக உள்பக்கப் பூட்டைத் திறந்து தனது மாமாக்கள் இருவரையும் வீட்டிற்குள் வரவழைத்துள்ளது. சாவியே இல்லாமல் தங்களது புத்தி கூர்மையால் குழந்தையை வைத்து வீட்டைத் திறந்த இந்தச் சுவாரசியமான காணொளி தற்போது நெட்டிசன்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.