மகாராஷ்டிராவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக (FDA) ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி துக்காராம் முண்டே பொறுப்பேற்றுக் கொண்டது முதல், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யும் மாஃபியாக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கும் கும்பல்களின் தூக்கம் அடியோடு தொலைந்து, தற்பொழுது ஒட்டுமொத்த மாநிலத்திலும் மிகப்பெரிய அதிரடிப் புரட்சி வெடித்துள்ளது.
கலப்படச் சங்கிலியை உடைப்பதற்காக, தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நேரடியாகக் கடுமையான “மகோகா” (MCOCA) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய ஆணையர் துக்காராம் முண்டே அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனால் எஃப்டிஏ அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் ரெய்டு வரலாம் என்ற பயத்தில், மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள கலப்பட வியாபாரிகள் தங்களது கடைகளை மூடிவிட்டு ஓடியுள்ளனர்.
இதுவரை நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கான டன் கலப்படப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; குறிப்பாக அன்றாடம் பயன்படுத்தும் பால் மற்றும் பால் பொருட்களில் நடக்கும் கலப்படங்களுக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே, நட்டநடு ராத்திரியில் நூற்றுக்கணக்கான டேங்கர்களில் கொண்டு வரப்பட்ட கலப்படப் பால், திறந்தவெளி மைதானத்தில் ஊற்றப்பட்டு அழிக்கப்படும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
பார்ப்பதற்குப் பாலாறே ஓடி ஒரு குளமே உருவானது போல் காட்சியளிக்கும் இந்த வீடியோ, எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்ற முழு விவரம் தெரியவில்லை என்றாலும், போலி பாலின் கோர முகத்தை உலகிற்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.
கார்ப்பரேட் போலிகளின் ஆதிக்கத்திற்கு மத்தியில், “ஒரு நேர்மையான அதிகாரி களத்தில் இறங்கினால் எப்படிப்பட்ட மெகா மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதற்கு இந்த பாற்குள வீடியோவே சாட்சி!” என்று நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த செய்தி மிகப்பெரிய அளவில் லைக்ஸ்களை அள்ளி செம ட்ரெண்டாகி வருகிறது.
