பணத்தை கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையர் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் சென்னை புதுப்பேட்டையில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவர் பெட்ரோல் நிலையத்தில் வசூலான 1 லட்சத்து 54 ஆயிரத்து 30 பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக சென்றபோது மர்ம நபர்கள் இவரை தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில் கார்த்திக் ராஜா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் அவரை பிடித்து கிடக்குபிடி விசாரணை மேற்கொண்டார்கள். இதில் அவர் பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துவிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்ததாக தனது நண்பர்களுடன் சேர்ந்து நாடகம் ஆடியது தெரிய வந்தது.

இவர் ஏற்கனவே சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் வேலை செய்து வந்தார். இவருடன் ஆனந்த், தங்கமுத்து உள்ளிட்டோரும் வேலை செய்து வந்தார்கள். சென்ற ஆறு மாதமாக கார்த்திக்கு ராஜா பெட்ரோல் நிலையத்தில் உதவி மேலாளராகவும் ஆனந்த் மற்றும் தங்கம் உள்ளிட்டோர் தொலைக்காட்சி தொடர்களில் உதவியாளர்களாகவும் வேலை செய்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாகி தருவதாக சோசியல் மீடியாவில் வந்த விளம்பரத்தை நம்பி சென்ற 3-ம் தேதி பெட்ரோல் நிலையத்தில் வசூலான 1 லட்சத்து 54 ஆயிரத்து 30 பணத்திலிருந்து 75 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் ஷேர்மார்க்கெட்டில் செலுத்தி இருக்கின்றார்.

மேலும் மீதமுள்ள பணத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு வங்கிக்கு செல்வதாக சென்று தனது நண்பர்கள் மூலம் அதை கொள்ளையடிப்பது போல் நாடகம் நடத்தியுள்ளார். இது போலீசாரின் விசாரணையில் தெரியவர மூன்று பேரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்கள். மேலும் அவர்களிடமிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 74 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தார்கள்.