கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலி கரைகண்டார் கோணத்தில் கட்டிட காண்ட்ராக்டரான கோபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சைலஜா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்ஜினியரான முரளிதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் முரளிதரன் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமான 6 வருடம் கழித்து சைலஜாவுக்கு ஜீவா என்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது ஜீவாவுக்கு 7 வயது ஆகிறது. பெங்களூரில் வேலை பார்த்த முரளிதரன் தனது மகனின் உடல்நிலை மெலிந்து மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்ததால் சொந்த ஊருக்கு வந்தார்.

பின்னர் வாடகை வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் குடியேறினார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது மாமனார் கட்டிக் கொடுத்த வீட்டில் முரளிதரன் தனது மனைவியுடன் குடியேறினார். இந்நிலையில் மகனுக்கு உடல்வளர்ச்சி குன்றியபடி இருந்ததால் ஜீவாவுக்கு அளவுக்கு அதிகமாக இருமல் டானிக் கொடுத்து பிளாஸ்டிக் கவரால் குழந்தையின் முகத்தை மூடி கொலை செய்து விட்டு கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். மேலும் முரளிதரன் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முரளிதரன் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் ஜீவாவின் உடல்நிலை சரியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்து வந்தோம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு ஜீவா அதிக நாட்கள் உயிர் வாழ போவதில்லை என தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் நாங்கள் தற்கொலை செய்ய முடிவு எடுத்தோம். ஆனால் நாங்கள் இறந்த பிறகு ஜீவா அனாதையாகி விடுவான் என நினைத்து அவனையும் கொலை செய்தோம் என கடிதத்தில் எழுதியுள்ளார்.