உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அருகே உள்ள நைனி பகுதியில், 70 வயது முதியவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை 36 மணி நேரத்திற்குள் போலீஸார் துப்புலக்கி உள்ளனர். தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த காரணத்திற்காக, மற்றொரு முதியவர் இக்கொலையைச் செய்தது அம்பலமாகியுள்ளது.

பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த ஹசாரிலால் (70) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமலால் (66) என்பவரின் மனைவி அனார்கலி (65) என்பவருக்கும் இடையே கடந்த 8 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் ராமலாலின் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது மனைவி தன்னிடம் பேசுவதைத் தவிர்த்து வந்ததாலும், சமூகத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தாலும் ஆத்திரமடைந்த ராமலால், ஹசாரிலாலைத் தீர்த்துக்கட்ட 10 நாட்களுக்கு முன்பே திட்டம் தீட்டியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 2 மற்றும் 3-ஆம் தேதி நள்ளிரவில், ஹசாரிலால் ஒரு மணல் குவாரியில் காவலாளியாகப் பணியில் இருந்தபோது கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 2 மணியளவில் அங்கு வந்த ராமலால், தான் மறைத்து வைத்திருந்த கோடாரியால் ஹசாரிலாலின் தலையில் பலமாகத் தாக்கினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஹசாரிலாலின் முகம் மற்றும் தலையில் ராமலால் சரமாரியாக வெட்டினார். இதில் ஹசாரிலால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

கொலைக்குப் பிறகு, ரத்தம் படிந்த கோடாரியை ராமலால் தனது வீட்டில் இருந்த மணல் குவியலுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார். கொல்லப்பட்ட ஹசாரிலாலின் மகன் சோனு அளித்த புகாரின் பேரில் நைனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ரகசியத் தகவல்கள் அடிப்படையில், 36 மணி நேரத்திற்குள் குற்றவாளி ராமலாலை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ராமலால் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கோடாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். முதிய வயதில் ஏற்பட்ட கள்ளக்காதல் மற்றும் ஆத்திரத்தால் இரண்டு குடும்பங்கள் சீரழிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.