ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் என்பவரின் மனைவி ரேகா, திருமணமான இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளை விட்டுவிட்டு, சதிஷ் என்ற நபருடன் வீட்டை விட்டு வெளியேறி வேறொரு திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு மணீஷுக்கும் ரேகாவுக்கும் திருமணம் நடந்து இரு மகன்கள் உள்ளனர். குடும்பத் தலைவன் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த காலத்தில், சதிஷ் என்பவர் ரேகாவுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென ஒருநாள் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் வீட்டை விட்டு வெளியேறிய ரேகா, சமூக வலைதளங்களில் திருமண புகைப்படங்களைப் பதிவிட்டதை கண்டு மணீஷ் அதிர்ச்சியடைந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டதை அறிந்த மணீஷ், தனது குழந்தைகளுடன் அங்கு சென்று தட்டிக்கேட்டுள்ளார். ஆனால், அங்குள்ளவர்கள் அவரை மிரட்டி விரட்டியதுடன், மணீஷின் ஆறு ஏக்கர் நிலம் மற்றும் வீட்டை ஏமாற்றி அபகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் வீதியிலே நின்ற மணீஷ், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்ட ஹிசார் நீதிமன்றம், ரேகா, அவரது புதிய கணவர் சதிஷ் மற்றும் உடந்தையாக இருந்த குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. வரும் நவம்பர் 25, 2026-க்குள் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
