சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சித்துப் பேசினார். விஜய்யின் இந்த விமர்சனங்கள் குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பாஜாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், விஜய் அரசியலில் அனுபவம் இல்லாதவர் என்றும், அவர் முதலில் தனது குடும்பத்துடன் நல்ல உறவை வைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா?” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி விஜய்யைத் தாக்கிப் பேசினார்.

சினிமாவில் பெரிய நடிகராக இருப்பதால் மட்டும் வாக்குகள் கிடைத்துவிடாது என்றும், விஜயகாந்த் காலத்திலேயே கூட்டங்கள் கூடினாலும் அவை வாக்குகளாக மாறவில்லை என்பதையும் அவர் நினைவூட்டினார்.

விஜய் தனக்கு ஒரு போட்டியாளரே கிடையாது என்றும், அவர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்றும் நயினார் நாகேந்திரன் உறுதியாகத் தெரிவித்தார்.