தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சேலத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றியபோது அதிமுக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

குறிப்பாக, அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் கொள்கைகளை மறந்தவர்கள்தான் தன்னை ‘அனுபவம் இல்லாதவர்’ என்று விமர்சிப்பதாக அவர் மறைமுகமாக அதிமுகவைத் தாக்கினார்.

விஜய்யின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது எக்ஸ் (X) பக்கத்தில் ஒரு காரசாரமான பதிவை வெளியிட்டுள்ளது.

அதில், விஜய் சொந்தமாகச் சிந்தித்துச் செயல்படாமல் மற்றவர்களின் வரலாற்றையும், பாணிகளையும் ‘காப்பி பேஸ்ட்’ செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். சினிமாவில் ரஜினி, விஜயகாந்த் ஆகியோரைப் பின்பற்றியது போல, அரசியலிலும் மற்ற தலைவர்களின் புகழைத் திருடி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதாக அதிமுகவினர் சாடியுள்ளனர்.

மேலும், சொந்தமாக ஒரு வரி கூடப் பேசத் தெரியாதவர் மற்ற கட்சிகளைப் பற்றி விமர்சிக்கக் கூடாது என்றும், அடுத்தவர் குதிரையில் சவாரி செய்பவர் ஒருபோதும் ‘ஒரிஜினல்’ ஆக முடியாது என்றும் அதிமுக விமர்சித்துள்ளது.

சினிமா டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பது குறித்துப் பேசிய அதிமுக, “உங்களுக்கு 30 ஆண்டு கொள்ளை அனுபவம் இருக்கிறது, ஓரமாகப் போய் விளையாடுங்கள்” என விஜய்யைக் கிண்டல் செய்துள்ளது.